சக்ரவர்த்திக் கீரை
சக்ரவர்த்திக்க் கீரைக்கு கண்ணாடிக்க் கீரை, சிக்கோலிக் கீரை, சில்லிக் கீரை என்ற பெயர்களும் உண்டு. பருப்புடன் இக் கீரையை கடைந்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வர உடலின் வெப்பம் தணிந்து உடலுக்கு குளிர்ச்சியைத்தரும், இரத்தத்தை சுத்தப்படுத்தும், பசியைத் தூண்டும், தாது விருத்தியை பெருக்கும் அத்துடன் சோர்வை அகற்றும். குறிப்பு: தாது விருத்திக்கு நிகரற்ற கீரை.
அரைக் கீரை
அறுகீரை என்பதே அரைக்கீரை என மருவியது. அறுப்புக்க்கீரை, கிள்ளுக்கீரை என்னும் பெயர்களும் அரைக்கீரைக்கு உண்டு,அரைக்கீரையை புளிவைத்து கடைந்து உண்ணலாம். மிகவும் சுவையாக இருக்கும். ஐஸ் கிறீம் சாப்பிடும் உணர்வைத்தரும்.
அரைக்கீரை விதையில் இருந்து தயாரிக்கப்படும் தைலம் உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தருவதோடு தலை முடியை கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர்ச்சியடையச் செய்கிறது.
கறிவேப்பிலை
கறிவேப்பிலையால் அரோசகம், சீதபேதியால் வரும் வயிற்றுளைவு, புராதன சுரம் ஆகியவை போகும்.கறிவேப்பிலையை சுட்ட புளி, வறுத்த மிளகாய், வறுத்த உப்பு சேர்த்து துவையல் அரைத்து சாப்பிடலாம். நல்ல பசியைத் தூண்டி உணவை அதிகளவு உட்கொள்ள வைக்கும். இரத்தத்தில் உள்ள வெண்சிறுதுணிக்கைகளுக்கு பலமூட்டும். உடலுக்கு வலுவைத்தந்து பித்தவாந்தி, அஜீரணம், புளியேப்பம், இவைகளைப் போக்கும். கண்களுக்கு பிரகாசத்தத்தைத் தரும். வாசனைப்பொடியுடன் கறிவேப்பிலையைச் சேர்த்து குழந்தைகளுக்கு குளிப்பாட்டி வர மேனி பொன்னிறமாகும்.
குப்பைக்கீரை
குப்பைக்கீரைக்கு முள்ளிக்கீரை என்ற பெயரும் உண்டு. குப்பைக்கீரை நீர் அடைப்பை சரிசெய்யும் ஆற்றல் கொண்டது. ஜராடக்கினியை விருத்தி செய்து பசியை ஏற்படுத்தி அதிக அளவு உணவை உட்கொள்ள வைக்கும். அத்துடன் ஆறாத புண்களையும் ஆற்றும் குணம் படைத்தது.
பண்ணைக் கீரை
பண்ணைக்கீரையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடலுக்கு உறுதியைத் தரும். மலச்சிக்கலை போக்கும். கரப்பான், கிரந்தி, விரணம் போன்றவற்றை நீக்கும். பருப்புடன் பண்ணைக்கீரையை பொடிதூவி நெய் சேர்த்து சாதத்துடன் சாப்பிடலாம்.
புளிப்புக் கீரை
புளிப்புக்கீரையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர வாதகோபம் நீங்கும், அருசி, சீதளம், இரத்த பித்த ரோகம், கரப்பான் போன்றவை விலகும். பித்தம் கதிக்கும். புளிப்புக்கீரை லேசான புளிப்புச் சுவையுடன்கூடியதாக இருக்கும். பருப்புடன் பொடித்தூவல் செய்து நெய் சேர்த்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும். குறிப்பு: வாத, பித்த ரோகங்களுக்கு எதிரி, புளிப்புக்கீரை.
கலவைக்கீரை
பல கலவையும் கலந்த கீரை. வாத, பித்த, கப தோஷங்களையும், மலச்சிக்கலையும், ஆந்திர பித்த வாதத்தையும் போக்கும். ஆரோசி, ஐயம், குடல்வாதம், முக்கல்ரோகம் நீங்கும். அபான வாயு சுத்தியாகும், பசியைத்தூண்டும். குறிப்பு: திரிதோஷத்தையும் போக்கும் ஆற்றல் கொண்டது.
கொடிப்பசலைக் கீரை
கொடிப்பசலைக்கீரை எனவும் கோடி வயலைக்கீரை எனவும் இதனை குறிப்பிடுவர். பருப்புடன் சேர்த்து கீரையைக் கடைந்து சாப்பிட்டு வர வேண்டும். நீர்க்கடுப்பு நீங்கி நீர் வெளியேறும்.ஒழுக்கு வெள்ளை கட்டுப்படும். அருசி, வாந்தி ஆகியவை நிற்கும். கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயன்படும் கீரையாகும்.
மணலிக் கீரை
மணலிக்கீரையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர வாத கபம், மார்புச்சளி, முதலிய பல நோய்கள் குணமாகும். கிருமி ரோகம், பைத்திய தோஷம் நீங்கும். குறிப்பு: கிருமிகளுக்கு எமன், மணலிக்கீரை
லச்சக்கெட்ட கீரை
பருப்புடன் கூட்டி பொடித்தூவல் செய்து நெய் சேர்த்து சாதத்துடன் சாப்பிட தேகம் தேக்கு போல் ஆகும். உடல் உஷ்ணமும் விலகும், தாகமும் நீங்கும், வாயுவும் போகும். வாத சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும். எல்லா விதத்திலும் நன்மையையே தரும். குறிப்பு: நோஞ்சானை பயில்வானாக்கும் சிறப்புமிக்க கீரை, லச்சக்கெட்ட கீரை.
அகத்திக் கீரை
அகத்திக் கீரையை ஆய்ந்து அரிசி களைந்த தண்ணீரில் சின்ன வெங்காயம், சீரகப்பொடி, தேவையான அளவு உப்பு போன்றவற்றுடன் ஆய்ந்த கீரையையும் போட்டு வேக வைத்து சாப்பிடலாம். குடிக்கவும் செய்யலாம். ஆய்ந்த அகத்திக்கீரையுடன் தேவையான அளவு உப்பு , வர மிளகாய், வெங்காயம் சேர்த்து பொரியல் செய்து சாப்பிடலாம். இது ஜீரண சக்தியை தருவதோடு மலச்சிக்கலை போக்கும். பைத்திய தோஷம் நீங்கும். இடுமருந்தின் வேகத்தை தணிக்கும். கடுவனையும் வாய்வையும் உண்டுபண்ணும். குறிப்பு: அகத்திக்கீரை உபயோகிக்கும் நாளன்று மது அருந்துதல் கூடாது. மதுவை முறிக்கும் குணம் அகத்திக் கீரைக்கு உண்டு.
வேளைக்கீரை
வேளைக்கீரையில் சிரஷ்தாப ரோகம், குடைச்சல், சீதளம், வாத கப தோஷங்கள், வீக்கம் போன்றவி குணமாகும். இருமலை நீக்கி பசியைத் தூண்டும். குறிப்பு: மார்பு வலியைக் குணமாக்கும் வல்லமை பொருந்திய கீரை இது.
கொத்தமல்லிக் கீரை
கொத்தமல்லிக் கீரையை புளி, வரமிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து துவையலாக அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் வாத அரோசகம், பித்த சுரம் போகும். வன்மையும் சுக்கிலமும் விருத்தியாகும். இரத்தத்தை விருத்தி செய்யும். பித்த சம்பந்தமான வியாதியைக் குணப்படுத்தும். உடலை வளர்க்கும். தாதுவை விருத்தி செய்யும். கொத்தமல்லிக் கீரையை சுத்தப்படுத்தி தண்ணீர் சேர்க்காமல் தகுந்த புளி, வரமிளகாய், உப்பு சேர்த்து குத்து உரலில் போட்டு இடித்து கொத்தமல்லித் துவையலைக் கட்டியாக எடுத்து தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.இத்துவையல் ஒரு மாதம் வரை கெடாது. குறிப்பு: உடல் வளர்ச்சிக்கு உத்தமமான கீரை.
மணத்தக்காளிக் கீரை
மணத்தக்காளிக் கீரைக்கு நாவில் உள்ள புண் நீங்கும். வேக்காடு மறையும். சிலேஷ்ம ரோகம் நீங்கும். மணத்தக்காளிப் பழம் குரலில் இனிமையை உண்டாக்கும். பருப்புடன் பொடித்தூவி நெய் சேர்த்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். உள்ளுறுப்புக்களை பலப்படுத்தும் தன்மை இக்கேரைக்கு உண்டு. குறிப்பு: இது பெண்களுக்கு பல விதங்களிலும் நன்மைகளை தரும் கீரையாகும்.
புளிச்ச கீரை
புளிச்ச சுவையுடைய இக்கீரைக்கு சுக்காங்கீரை என்ற பெயரும் உண்டு. தேகத்திற்கு மிக்க வலுவைத்தரும். போகத்தில் நாட்டத்தையும் ஏற்படுத்தும். தீராத பித்தத்தை போக்கும். இரத்த பேதியை நிறுத்தும். நுரையீரலை வலுப்படுத்தி சுவாசத்தை சீர் செய்யும். புளிச்ச கீரையின் எல்லா பகுதிகளும் உணவுக்கு ஏற்றதே. புளிச்ச கீரையை பருப்புடன் பொடிதூவி நெய் சேர்த்து சாதத்துடன் சாப்பிட உரிய பலன்களை தரும். குறிப்பு: பெண்களுக்கு வரும் மார்புப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் புளிச்ச கீரைக்கு உண்டு.
கீரைத்தண்டு
கீரைத்தண்டு மூன்று வகைப்படும். கீரைத்தண்டு, வெண்கீரைத்தண்டு, செங்கீரைத்தண்டு என பயிரிடப்படுகின்றது. மூன்றிலும் தண்டே உணவாகும். தண்டைப் பொடிப்பொடியாக நறுக்கி வேகவைத்து உப்புச்சாறு, புளியில்லாக் குழம்பு ஆகியவற்றுடன் தனியாகவோ அல்லது மற்ற காய்கறிகளுடன் சேர்த்தோ கத்திக்க வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். அதிவாதசீதமுள்ள கீரைத்தண்டால் பித்தகிரிச்சுரம், பிரமேகச்சூடு, வயிற்ருக்கடுப்பு, இரத்தபேதி, நீர்க்கடுப்பு ஆகிய நோய்கள் முற்றிலும் குணமாகும். குறிப்பு: கீரைத்தண்டு கொலஸ்ட்ரோலை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.வெண்கீரைத்தண்டு
வெண்கீரைத்தண்டில் உள்ள விஷேசம், உடல் வேப்பம் நீங்கி குளிர்ச்சியடையும், வெளி மூலரோகம் முற்றிலும் நீங்கும். பித்த எரிச்சலும் நீங்கும்.
வெண்கீரைத்தண்டை பொடியாக நறுக்கி வேக வைத்து உப்புச்சாறு, புளியில்லாக் குழம்பில் மற்ற காய்கறிகளோடு சேர்த்து அல்லது தனியாக கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
உடல் துர்நாற்றத்தை போக்கும்.
குறிப்பு: வெண்கீரைத்தண்டின் விசேடம், கடுவன் பூனை போன்றவர்களையும் கலகலப்பாக்கிவிடும்.
செங்கீரைத்தண்டு
தீராத பித்த நோயையும், பெண்களுக்குள்ள பெரும்பாட்டையும், பிரலாபசன்னி, பாதசுரம் போன்றவற்றையும் நீக்கும். செங்கீரைத்தண்டை பொடியாக நறுக்கி வேகவைத்து உப்புச்சாறு, புளியில்லாக் குழம்பில் மற்ற காய்கறிகளோடு சேர்த்து அல்லது தனியாக கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
பருமனான உடல்வாகு கொண்டவர்கள் உடல் இளைக்க செங்கீரைத்தண்டை தொடர்ந்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும், உடலில் உள்ள நீரையும் வெளியேற்றிவிடும்.
குறிப்பு: செங்கீரைத்தண்டு மேனியின் கருமையைப் போக்கி எழிலான மேனியைத் தரும்.
வங்கார வள்ளிக்கீரை
மழைக்காலத்தில் கிடைக்கும் வங்கார வள்ளிக் கீரையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்று உப்புசம் நீங்கும், மலச்சிக்கல், வாதநோய், நீரடைப்பு நீங்கும். குறிப்பு: குடலுக்கு சுகத்தை தரும்.
சாணாக்கீரை
இக்கீரை முக்கியமாக மகோதரம் என்னும் கொடிய வியாதியை நீக்கும். கிருமிகளைக் கொண்டுள்ள பலநாட்பட்ட புண்களை ஆற்றும் அபார சக்தி இதற்கு உண்டு. அக்கினி மாந்தம், சுழிக்கணம் ஆகியவை போகும். குறிப்பு: கிருமிகளின் பரம எதிரி சாணாக்கீரை.
சிறு கீரை
இக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வர பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் விலகும். காசநோய் குணமாகும். கண் புகைச்சல், கண் படலம் நீங்கும். தும்பிரநோய், நாட்பட்ட புண் ஆகியன குணமாகும். நீர்க்கடுப்பு, வீக்கம், பித்தநோய் ஆகியன சரியாகும். நாவி பாஷாணம் விஷங்களை எடுத்துவிடும். மேனிக்கு எழிலையும் அழகையும் வாரி வழங்கும். பெண்களின் மேனி எழிலுக்கு ஒரு வரப்பிரசாதம் இந்தக் கீரை. செம்புச் சத்தும் உஷ்ண வீரியமும் உடையது. குடல், இருதயம், மூளை, இரத்தம் இவைகளுக்கு நல்ல வலிமையைத் தரும். குறிப்பு: மருந்து சாப்பிடும்போது சிறுகீரையை சேர்க்கக்கூடாது.
சிறு பசலைக்கீரை
அதிக சுவையுள்ள சிறு பசலைக்கீரை புணர்ச்சியில் இச்சையை தூண்டும், நா வறட்சியை நீக்கும், சூட்டை தணிக்கும், மலச்சிக்கலை தவிர்க்கும், பல நல்ல குணமுடைய இக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். கர்ப்பிணிப்பெண்கள் உணவில் சேர்த்துக்கொள்ள நீர்க்கடுப்பு, நீரடைப்பு நீங்கும், சுபத்தை பெருக்கும். குறிப்பு: இல்லத்திற்கு இனிமை சேர்க்கும் கீரை.
காரைக்கீரை
காரைக் கீரைக்கு கடும் பித்தம் நீங்கும். புளிசேர்த்து கடைந்த காரைக் கீரையை சாப்பிட இரத்தக்கடுப்பு விலகும். குறிப்பு: பித்த தோஷத்திற்கு நிகரற்ற கீரை.
பாற்சொரிக் கீரை
இக்கீரையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்ருக்கடுப்பு நீங்கும். மலம், சீதம், இரத்த பேத்திகளையும் நீக்கும். இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் களைப்பு, சோர்வு, அலுப்பு ஏற்படுவதில்லை. குறிப்பு: பெயருக்கு ஏற்றாற்போல் தாய்ப்பாலைப் பெருக்கும் ஆற்றல் மிக்க கீரையாகும்.
0 comments:
Post a Comment