வேப்பிலை, வேப்பம்பூ மருத்துவம்

வேப்பிலை மருத்துவம்

வேப்ப மரம் அடி முதல் நுனித் தளிர் வரை மருத்துவத்தில் பயன்படுகின்றது. வேப்ப இலையால் கண்டமாலை, பாம்புக்கடி, அம்மைப்புண், பித்தவெடிப்பு, தேமல், வயிற்றுவலி, பைத்தியம், சொறி, சிரங்கு, முழங்கால் வாதம், இடுப்புப்புண், கண் சிவப்பு, மூக்கில் இரத்தம் கசிதல், மலச்சிக்கல், தூக்கமின்மை போன்ற நோய்கள் நீங்கும். மேலும் அது மீண்டும் வராமலிருக்க உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

கண்டமாலை குணமாக

வேப்பிலை, வெள்ளைக் கடுகு, சேராங்கொட்டை போன்றவற்றை சம அளவில் எடுத்து மண் சட்டியிலிட்டு தீயிட்டு கொளுத்த வேண்டும். எறிந்த கரி தானாக குளிரும்படி செய்ய வேண்டும். பின் ஆரிய கரியை வெள்ளாட்டு சிறுநீர் விட்டு அரைத்து கண்டமாலை மீது பற்று போட்டு வருதல் வேண்டும். இவ்வாறு செய்து வர ஓரிரு நாட்களில் கண்டமாலை காணாமல் மறைந்துவிடும்.

தேமல் மறைய

முகத்தில் தோன்றும் தேமல், முகப்பரு, மற்றும் தோல் வியாதிகள் நீங்க வேண்டுமாயின் வேப்பிலையை நன்றாக அரைத்து அதன் சாற்றை எடுத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு பருகிவர மேற்கண்ட நோய்கள் நம்மை அணுகாது.

வயிற்றுவலி நீங்க

வேப்பிலையையும் சீரகத்தையும் சேர்த்து நன்றாக அம்மியில் வைத்து அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேவையான அளவு சர்க்கரையை சேர்த்து 1 முதல் 1.25 அவுன்சு வரும் வரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகிவர வேண்டும். இவ்விதம் கடைப்பிடிக்க வயிற்று வலி நீங்கும்.

இடுப்புப்ப் புண், உடலில் ஏற்படும் சிராய்ப்புகளுக்கு

இடுப்புப் புண் பெரும்பாலும் பெண்களுக்கே வரும். இருப்பில் ஆடைகளை இறுக்கமாக கட்டுவதாலேயே இப்புண் வருகிறது.

இடுப்புப் புண் இருப்பின் வேப்பிலை, மஞ்சள், கடுக்காய் ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து அதனுடன் வெங்காயச் சாறு அல்லது எலுமிச்சஞ்சாறு விட்டு அரைத்து, படுக்கைக்கு செல்ல முன் இடுப்பில் பூசுதல் வேண்டும்.

பித்த வெடிப்பு

வேப்பிலை, மஞ்சள், மருதாணி ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து பித்தம் காரணமாக கால்களில் வெடிப்பு தோன்றும்போது காலை நன்றாக வெந்நீரில் கழுவி தூய துணியால் துடைத்த பின் வெடிப்பு உள்ள இடத்தில் தொடர்ந்து போட்டு வருதல் வேண்டும். இவ்வாறு செய்துவர விரைவில் பித்த வெடிப்பு மறையும்.

பைத்தியம் தெளிய

புத்தி சுவாதீனத்தை போக்க தொடக்கத்தில் இருந்தே வேப்பிலையை தினசரி காலையில் சாப்பிட்டு வர புத்தி தெளியும்.

சொறி,சிரங்கு குணமாக

சொறி,சிரங்கு தொல்லையிலிருந்து பூரண குணம் பெற - வேப்பிலையையும் வெங்காயத்தையும் ஒன்றாக அம்மியில் வைத்து அரைத்து சொறி, சிரங்கு உள்ள இடத்தில் தடவுதல் வேண்டும். பின் கால் மணி நேரம் சென்றபின் குளிக்க வேண்டும். இம்முறையினை ஓரிரு நாட்களுக்கு செய்துவர சொறி, சிரங்கு மறையும்.

வாத தோஷம்

வேப்பிலை, பெருங்காயம், மிளகு, இஞ்சி முதலிய சுத்தமான பல பொருட்கள் சேர்ந்த மருந்தினால் வாத தோஷம், பைத்திய சிலேஷ்மம் போன்ற நோய்கள் குணமாகும்.

அம்மை நோய்

அம்மை நோய்க்கு வேப்பிலை ஒரு சக்தி மிகுந்த கிருமி நாசினி ஆகும். வேப்பிலையை தரையில் பரப்பி அம்மை வார்த்தவர்களை அதில் படுக்க வைத்தல் நலம்

அம்மை வார்த்து பதினைந்து நாட்கள் சென்ற பின் தலைக்கு தண்ணீர் விடுதல் வழக்கம். வேப்பிலை, அருகம்புல், மஞ்சள், துளசி போன்றவற்றை மை போல் அரைத்து உடம்பில் பூசிய பின் வேப்பிலை போட்டு சுட வைத்த நீரை நன்கு குளிர வைத்த பின் குளித்தல் வேண்டும்.

முன்பு சொன்னது போலவே பன்னிரண்டு மணி நேரம் சென்றபின் வேப்பிலையில் சுட வைத்த நீரை குளிரச்செய்து குளித்தல் வேண்டும். இவ்வாறு செய்துவர அம்மை நீங்கும். இதனால் ஏற்பட்ட புண்ணும் மறையும்.

தூக்கமின்மைக்கு

வேப்பிலைச்சாறு 1/4 அவுன்சு, தண்ணீர் 3 அவுன்சு, எலுமிச்சஞ்சாறு 1/4 அவுன்சு ஆகியவற்றை சேர்த்து கலந்து படுக்கைக்கு செல்ல ஒரு மணி நேரத்திற்கு முன் அருந்த நல்ல தூக்கம் வரும்.

கண் நோய்கள்

கண் நோய், கண் சிவப்பு, சிர நோய்கள் இருப்பின்-
வேப்பிலை, எள்ளு, பயறு, கடுகு ஆகிய நான்கையும் நன்கு பொடி செய்து வைத்துக்கொண்டு சிறிதளவு எடுத்து நெருப்பில் போடவும். அதனின்று எழும் புகையை கண் நோயுடையவர் நன்றாய் கண்களைத் திறந்து கண்ணிற்கு ஊட்ட வேண்டும். இப்புகையினால் கண் நோய், கண் சிவப்பு, சிர நோய்கள் ஆகியன குணமாகும்.

அஜீரணம் நீங்க

வேப்பிலையை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடி செய்து கொண்டு இவற்றோடு சீரகமும் மிளகும் உப்பும் சேர்த்து காலை, மாலை இரு வேளையும் சாப்பாட்டுடன் சாப்பிட அஜீரணம் நீங்கும்.

மலச்சிக்கல்

வேப்பிலையை நன்கு அரைத்து சாறு எடுத்துக் கொண்டு இதனுடன் உப்பையும் சர்க்கரையையும் சேர்த்து படுக்கைக்கு செல்ல முன் 1/2 அவுன்சு முதல் 1 அவுன்சு வரை சாப்பிட மலச்சிக்கல் நீங்கும்.

மூக்கில் இரத்தம் கசிதல்

வேப்பிலையையும் ஓமத்தையும் சம எடையாக எடுத்து அரைத்து நெற்றிப் பொட்டின் மேல் பற்றுப்போட்டால் மூக்கில் இரத்தம் வருவது நிற்கும்.

நீரிழிவு நோய்

வேப்பிலையை நிழலில் நன்றாக உலர்த்தவும். ஓமம், சுக்கு, உப்பு, பனை வெல்லம் ஆகியவற்றை வேப்பிலையுடன் சேர்த்து பொடி செய்து கொள்ளவும். இரவு படுக்கைக்கு செல்ல முன் அரைத்தோலா எடை எடுத்து பாலில் கலந்து சாப்பிடுதல் வேண்டும்.

கொசுக்கடிக்கு

நெடுநாட்சென்று மடிந்த பழங்கூரை வைக்கோலையும் காய்ந்த வேப்பிலையையும் சேர்த்து இடித்து பொடி செய்துகொள்ள வேண்டும். கொசு உள்ள இடங்களில் தீயிட்டு பொடியை எரிக்க இதிலிருந்து எழும் புகையால் கொசுக்கள் மடியும்.

 

வேப்பம்பூ மருத்துவம்

வேப்ப மரத்தின் இலை, தளிர், பட்டை, விதை போன்ற பிற பாகங்கள் மருத்துவத்தில் பயன்படுவதை விட வேப்பம்பூ அதிக நோய்களைக் குணப்படுத்துகின்றது.

மூர்ச்சை, நடுக்கம், உடல் பெருக்கம், காது சீழ்வடிதல், கண் பார்வை தெளிவுற, தொண்டைப்புண் ஆற, உடலில் ஏற்படும் கட்டிகள் உடைய, அஜீரணக் கோளாறுகள், பித்த வயிற்றுவலி போன்ற நோய்களுக்கு நோய் தீர்க்கும் மூலிகையாக உள்ளது.

பித்த வயிற்றுவலி( குன்மம்)

பித்தம் அதிகரித்தால் சிலருக்கு வயிற்றுவலி வரும். இந்த வயிற்று வலிக்கு தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால் இந்த நோய் பூரணமாக தங்கி விடும்.

புதிய வேப்பம்பூவை சுத்தம் செய்து இரண்டு ஆழாக்கு நீரில், இரவு அடுப்பில் சூடு செய்து வைத்து விடுதல் வேண்டும். காலையில் எழுந்ததும் அடுப்பில் இருக்கும் கஷாயத்தில் நான்கில் ஒரு பகுதியைக் குடிக்க வேண்டும். பின் மூன்று மணி நேரம் சென்ற பின் மூன்றில் ஒரு பங்கைக் குடித்தல் வேண்டும். பின் நான்கு மணி நேரத்தின் பின்னர் இரண்டில் ஒரு பங்கைக் குடிக்க வேண்டும். மீண்டும் மீதமிருக்கும் கஷாயத்தை மாலையில் குடித்துவிடல் வேண்டும்.

கட்டிகள் உடைய

வேப்பம்பூவையும் எண்ணெயையும் சேர்த்து அரைத்து கட்டிகளின் மேல் வைத்து கட்டி வர வெகு விரைவிலேயே எவ்வளவு கொடிய கட்டிகலானாலும் உடையும்.

அஜீரணக் கோளாறுகள்

பித்தம் தொடர்பான எல்லா விதமான பிணிகளையும் தீவிரமாகவும் துரிதமாகவும் விரட்டும் மகத்துவம் வேப்பம் பூவிற்கு உண்டு.

வேப்பம்பூவையும் நில வேம்பையும் சேர்த்து கஷாயம் வைத்தூ சாப்பிட அஜீரணக் கோளாறுகள் நீங்கி நல்ல பசி எடுக்கும்.

மூர்ச்சை, நடுக்கம் நீங்க

வேப்பம்பூவை கஷாயம் தயாரித்து அருந்த மூர்ச்சை, நடுக்கம், அபஸ்மாரம் ஆகியவை குணமாகும்.

வயிற்று கிருமிகள் மடிய

வேப்பம்பூவுடன் மிளகும் சிறிது உப்பும் சேர்த்து அரைத்து வயது வந்தவர்களுக்கு சுண்டைக்காய் அளவும், குழந்தைகளுக்கு ஒன்று அல்லது இரண்டு பட்டாணி அளவும் தினசரி காலை மாலை இரு வேளையும் சாப்பிட கொடுத்துவர வயிற்றில் உள்ள அனைத்து கிருமிகளும் சாகும்.

இந்த மருந்து உருண்டையை நீரில் கரைத்தும் உட்கொள்ளக் கொடுக்கலாம்.

தொண்டைப்புண் ஆற

கொதிக்கும் நீரில் வேப்பம்பூவைப் போட்டு அதன் ஆவியை தொண்டைக்குள் படும்படி செய்தல் வேண்டும். இவ்விதம் ஓரிரு நாட்கள் வேப்பம்பூ ஆவி பிடிக்க தொண்டைப்புண் விரைவில் ஆறும்.

கண் பார்வை தெளிவுற

வேப்பம்பூவை நன்கு உலர்த்தி சுத்தம் செய்து கொண்டு அதனுடன் வெடியுப்பு கலந்து இடித்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் சலாகையினால் அப்பொதியை எடுத்து கண்ணில் தீட்டிவர கண்பார்வை தெளிவுறும்.

காதில் வடியும் சீழ் நிற்க

தூய வேப்பம்பூவை கொத்தி நீரில் போட்டு அதன் ஆவியை காதில் பிடித்துவர காதில் வடியும் சீழ் நிற்கும். மேலும் காதுகளில் இருக்கும் இரணமும் குணமடையும்.

0 comments:

Post a Comment